எம்.பிக்களுக்கு வாகன இறக்குமதி இல்லை !!
2021ஆம் ஆண்டு முதல் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 50 இரட்டை கெப் வண்டிகள் மற்றும் ஜீப்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் அமைச்சரவைப் பத்திரம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு, நேற்று (07) அறிவித்தார்.
எம்.பிக்களுக்கான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க, குறித்த அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயம் அறிவிக்கப்பட்டது.
குறித்த அமைச்சரவைப் பத்திரம் அமல்படுத்தப்படாது என சட்டமா அதிபர் அறிவித்ததால், மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரரின் சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அப்போதைய அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
50 அம்பியூலன்ஸ்கள், 50 தண்ணீர் பௌசர்கள், எம்.பிக்களுக்கான 50 இரட்டை கெப் வண்டிகள் மற்றும் ஜீப்களை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை திறப்பதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் அனுமதி வழங்கியுள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு கடுமையான வெளிநாட்டு நாணய கையிருப்பு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையிலும், சுகாதார வசதிகள் பற்றாக்குறைக்கு மத்தியில் கொரேனாவைக் கட்டுப்படுத்த போராடும் சூழ்நிலையிலும், இந்த வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் மூலம், அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.