தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும் – பிரதமர் ரணில்!!
தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும். ஆகக் குறைந்தது எழும்புவதற்கு முயற்சி செய்தாகவேண்டும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் கையைப் பிடித்து தூக்கிவிடுவர். முயற்சி செய்யாவிடின் இலகுவான காரியங்கள் கூட, முடியாமல் போய்விடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் ஊக்கப்படுத்தமாட்டார்கள். இறுதியில் முடியாமலே போய்விடும்.
நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நேற்று (07) ஆற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்தகால கசப்பான கொள்கைகளை நினைவு கூர்ந்து, நெருக்கடிகளுக்கான காரணங்களை விளக்கி, மக்களின் மனோநிலையை விளங்கிக்கொண்டு, எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து எழுவதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளார்.
கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எந்தப் பக்கத்துக்கும் சாராதவராய் நிற்கும் தனக்கு ஆதரவளிக்குமாறு, சகல தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர், உண்மையை அச்சொட்டாக எடுத்துரைத்து, அனைவரின் மனங்களையும் தெம்பூட்டும் வகையில், ஊக்கப்படுத்தியுள்ளார்.
ஆகையால், நாளைக்கு என தள்ளிப்போடாமல், சுப நேரத்துக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்காமல், இந்த நிமிடத்திலிருந்தே ஒவ்வொருவரும் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நெருக்கடியான நிலைமை, இன்னும் ஆறு மாதங்களுக்கு அப்படியே இருக்குமென, உண்மையை உரக்கக் கூறி, மக்களைத் தயார்படுத்த ஊக்குவித்துள்ளார்.
கசப்பாக இருந்தாலும் உண்மையைக் கூறவேண்டும்; பூசி மெழுகுவதால் பயனேதும் கிடைக்காது. இந்த நெருக்கடிகளை இன்னும் எத்தனை மாதங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதைத் தெட்டத்தெளிவாக கூறியிருக்கின்றார். நாளைக்கே மீண்டெழ முடியுமென்ற பொய்யை, மக்கள் மனங்களில் விதைக்கவில்லை.
ஆக, பிரதமரால் நேற்றையதினம் (07) ஆற்றப்பட்ட நெருக்கடி நிலைமை குறித்த உரையை, வழமையான உரையுடன் ஒப்பிட்டு கடந்து சென்றுவிடக் கூடாது. சிரமத்தை சிரமமாகப் பார்க்கக்கூடாது. நம்பிக்கையுடன் முன்னோக்கி நகரவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோமென இருக்காமல், நீண்டகாலத் திட்டமிடல் அவசியமாகும்.
அதுமட்டுமன்றி, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பொருட்களை பதுக்கிவைத்து, இலாபமீட்டும் பெரும் முதலைகள், தங்களுடைய சின்னத்தனமான சிந்தனையை கைவிட்டு, மனிதாபிமானத்துடன் செயற்படுவதற்கு இனிமேலாவது கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இறுதியாக ஒதுக்கப்படும் ஆறடிக்குள், எதையுமே எவரும் கொண்டு சென்றதில்லை. வாழும்போதே சந்தோஷமாக வாழப் பழகிக்கொள்வோம்.
தனியொருவராக நின்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, நெருக்கடியான காலத்தில், பிரதமர் பதவியை ஏற்று, சவால்களை சிறுகச்சிறுக உடைத்துக்கொண்டு போகின்றார். அவரது கரங்களைப் பலப்படுத்த, ஒவ்வொருவரும் தங்கள் கரங்களால் முயலவேண்டும்.
‘அவநம்பிக்கையாளர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிரமத்தைப் பார்க்கிறார்; நம்பிக்கையாளர் ஒவ்வொரு சிரமத்திலும் வாய்ப்பைப் பார்க்கிறார்” என பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிகவும் சிறந்தவரான வின்சென்ட் சர்ச்சிலின் கூற்றை மேற்கோள் காட்டி, தனது உரையை பிரதமர் நிறைவு செய்திருந்தமை மூலம், ஒவ்வோருவரையும் ஊக்கமூட்டி உள்ளார்.