ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறான பொதுவான கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால், பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், டீசல் விலை உயர்வால் ரயில் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு ரயிலை இயக்குவதற்கு எரிபொருளுக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும். இந்த ரயிலில் சுமார் 500 பயணிகள் பயணித்தாலும்கூட 10 இலட்சம் ரூபாவே வருமானமாகக் கிடைக்கும்.
இதன்படி யாழ்ப்பாணத்திற்கான ஒரு ரயில் பயணத்தில் 3 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.