பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட வேண்டும்: சுமந்திரன் !!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. ஆகவே அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.
இதேவேளை தற்போதைய பாராளுமன்றம் அதற்கான முறைமையை மீறியுள்ளது என்றும், இதனால் பாராளுமன்றத்தை காலம் தாழ்த்தாது கலைப்பதே சிறந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (8) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரை மற்றும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன்போது ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்த 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தனர். சுபீட்சமான நோக்கு என்று தேர்தல் விஞ்ஞாபனத்தை கொண்டு வந்திருந்தார். அதனை நாடு இருக்கும் நிலைமையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதில் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி விசேட முன்மொழிவு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதில் வருமான வரி, பெறுமதி சேர் வரி, தேசத்தை கட்டியெழுப்பும் வரி என பல்வேறு வரிகள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டது. அப்போது நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, இந்த முன்மொழிவுகளை அமல்ப்படுத்தப்பட்டால் இலங்கை லெபனான் போன்று நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்று கூறியிருந்தார். இதன்படி அவரின் எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது என்றார்.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. பிரதமர், அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் ஆகியோர் இராஜினாமா செய்தனர். இதற்கு காரணம் என்ன?. அதேபோன்று அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஏன் சுயாதீன தரப்பினராக மாறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த பாராளுமன்றம் இனினும் அரச, எதிர் தரப்பு என்று இருக்க முடியாது. சுயாதீன உறுப்பினர்களையும் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொருவரும் எழுந்து சுயாதீனம் எனக் கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு இருக்க முடியாது. நிலையியல் கட்டளைக்கு அமைய அரச, எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கலாம். சுயாதீனம் என்பது எங்களின் முறையல்ல.
எவ்வாறாயினும் ஜனாதிபதி நிச்சயமாக வெளியேற வேண்டும்.
ஜனாதிபதியே தவறு செய்தவர். அவர் மக்கள் ஆணையையும் மீறிவிட்டார். மூன்றில் இரண்டுடன் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது அரசாங்கத்திற்குள் குழுக்கள் அமைக்கப்பட்டதால் ஆணைகளை அது இழந்துள்ளது. இதன்படி பாராளுமன்றம் அதன் சட்டபூர்வ தன்மையை இழந்துள்ளது. இதனால் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். ஏற்கனவே கலைக்கப்பட்ட நிலைமையிலேயே இருக்கின்றோம். இதனால் இதனை முறையாக கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.