யாழில் திருடப்பட்ட மாற்றுத்திறனாளியின் முச்சக்கர வண்டி மீட்பு!
யாழில் மாற்றுத்திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டியை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , திருடப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முச்சக்கர வண்டி கடந்த மே மாதம் திருடப்பட்டது. குறித்த முச்சக்கர வண்டி உரிமையாளர் ஒரு மாற்று திறனாளியாவர். அவர் முச்சக்கர வண்டி ஓட்டுவதன் ஊடாக பெறும் வருமானமே , அவரது குடும்ப வாழ்வாதாரம் ஆகும்.
முச்சக்கர வண்டி திருட்டு போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் , முச்சக்கர வண்டி உரிமையாளர் சமூக வலைத்தளங்கள் ஊடாக திருட்டு போன முச்சக்கர வண்டியை கண்டுபிடித்து தருமாறும் கோரியிருந்தார்.
அந்நிலையில் பருத்தித்துறை பொலிஸாருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , துன்னாலை பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வைத்திய சாலை பின் வீதியில் திருடப்பட்ட முச்சக்கர வண்டி , அதன் இலக்க தகட்டை மாற்றி பாவித்து வந்தமையை கண்டறிந்து அதனை மீட்டனர்.
குறித்த நபர் யாழில் இடம்பெற்ற வேறு சில முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பொலிஸார் சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”