இந்தியாவுக்கு கடத்தவிருந்த உயர் ரக ஆடுகள் 5 சிக்கின !!
தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பற்றைக்காட்டு பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்த உயர்ரக ஆடுகள் ஐந்தை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் உயர்ந்த ரக ஆடுகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானித்த தலைமன்னார் கடற்படையின,ர் குறித்த ஆடுகளை மீட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த ஐந்து ஆடுகளில் பெண் ஆடொன்றும் உள்ளது. உயர் ரகத்தைச் சேர்ந்த ஆண்டுகள் ஐந்தும், இந்தியாவுக்குக் கடத்திச்செல்லும் நோக்கில், கால்கள் கட்டப்பட்டு, காட்டுக்குள் விடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தன்னுடைய ஆடுகளை காணவில்லையெனத் தெரிவித்துள்ள தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, அவை தன்னுடையதென உரிமை கோரியுள்ளார்.
இதனையடுத்து, மேற்படி ஆடுகள் விவகாரத்தை, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார், புதன்கிழிமை (08) கொண்டுவந்தனர்.
ஆடுகளின் உரிமையாளர் என்பவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலித்த நீதவான், ஆவணங்களில் தெளிவில்லாத தன்மை எடுத்துரைத்து, சரியான ஆவணங்களை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் கட்டளையிட்டார்.
அது வரையிலும் அந்த ஐந்து ஆடுகளையும் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.