;
Athirady Tamil News

கேரள முன்னாள் மந்திரி புகாரின் பேரில் ஸ்வப்னா சுரேஷ் மீது போலீசார் வழக்கு..!!

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கொச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்கு கடந்த 2 நாட்களாக கோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் ஆஜரானார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும் முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மீதும், ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சுமத்தினார். வெளிநாடுகளில் இருந்து கரன்சி கடத்தப்படுவது அவருக்கு தெரியும் என ஸ்வப்னா சுரேஷ் கூறினார். இந்தநிலையில் அவரது குற்றச்சாட்டை முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், பா.ஜ.க. மற்றும் யு.டி.எப். சதி என்றும் அவர் கூறினார். மேலும் தற்போதைய அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சதி குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசில் புகாரும் அளித்துள்ளார். சிலரின் தூண்டுதலின் பேரிலேயே இதுபோன்ற பொய்யான செய்திகளை ஸ்வப்னா சுரேஷ் பரப்பி வருகிறார். அரசியல் நோக்கத்துடன் அவதூறு செய்திகளை பரப்பி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக துணை இயக்குனரின் சட்ட ஆலோசனையின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஸ்வப்னா சுரேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.