4 மாநிலங்களில் நாளை மேல்சபை எம்.பி. தேர்தல்..!!
உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்க்கண்ட், அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பா.ஜனதாவுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும். ஆனால் 6-வது இடத்தை பெறுவதில் சிக்கல் உள்ளது. பா.ஜனதா 3 பேரையும், சிவசேனா 2 பேரையும் நிறுத்தி உள்ளது. இதனால் ஒரு இடத்துக்கு போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதா-3, காங்கிரஸ்-2, மதசார்பற்ற ஜனதா தளம் ஒருவர் என களத்தில் உள்ளனர். ராஜஸ்தானில் 4 இடங்களுக்கான ஓட்டுப்பதிவில் காங்கிரஸ் 3 வேட்பாளர்களும், பா.ஜனதா ஒரு வேட்பாளரும், பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சையாக சுபாஷ் சந்திராவும் போட்டியில் உள்ளனர். அரியானாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு சந்தேகமாகி உள்ளது. 4 மாநில மேல்சபை தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். இதற்கிடையே பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.