இலங்கைக்கு உதவும் இந்தியாவை பாராட்டுகிறோம்- சீனா அதிரடி..!!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்நாட்டு அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இருப்பினும் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் தீரவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. ரூ.20,000 கோடி மதிப்பிலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதைத்தவிர 2000 கோடி ரூபாய் அளவிலான மருத்துவ உதவிகளையும் இந்தியா வழங்கி இருக்கிறது.
இந்தியாவின் இந்த உதவிகளை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவுத்துறை மந்திரி ஜாவோ லிஜியன் கூறியதாவது:- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை நாங்கள் அறிவோம். அதை சரி செய்வதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகளையும் நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். அவற்றை பாராட்டவும் செய்கிறோம்.
சீனா இந்தியா மற்றும் உலக நாடுகளுடன் இணைந்து இலங்கை மற்றும் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ தயாராக இருக்கிறது. சீனாவும் இலங்கைக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு சீனாவின் சமூக- பொருளாதார முன்னெற்றத்திற்கு ஆதரவை வழங்கி வருகிறோம். 500 கோடி அளவிலான மனிதாபிமான உதவிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.
இவ்வாறு ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.