80 சதவீதமானோர் மலிவான உணவை உண்கின்றனர் !!
இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு பருவங்களில் இருந்து நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.