’இலாபத்தில் ஒரு பகுதி வடக்குக்குக் வேண்டும்’ !!
வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்களை எந்த நிறுவனத்துக்கு வழங்கினாலும் உற்பத்தி மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை வடக்கு அபிவிருத்திக்காக வழங்குவதாக அந்த ஒப்பந்தங்களில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (9) இடம்பெற்ற மின்சார திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான பிரதேசங்களில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்கள் உள்ளதாக நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கிணங்க தற்போது பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே அவ்வாறான திட்டங்களுக்கு கேள்விக்கோரல் வழங்குவதா இல்லையா என சர்ச்சைகள் எழுந்துள்ளன. நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் மின்சாரத் தேவையின் அவசியத்தை கருத்திற்கொண்டு அது தொடர்பில் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
அதன்போது இயற்கை வளங்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவும் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, வடக்கில் மின் உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
எவ்வாறாயினும் இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் போது அதன் மூலமான இலாபத்தின் ஒரு பகுதியை வடக்கின் அபிவிருத்திக்கு வழங்க அந்த ஒப்பந்தங்களில் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.