துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை!! (படங்கள், வீடியோ)
துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொதுமக்களை பெரியநீலாவணை பொலிஸார் கேட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டி திருடப்படுவதாக முறைப்பாடுகள் சில கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பெரிய நீலாவணை பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சந்தேகத்தின் பேரில் ஆண், பெண், சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் பிரதான சந்தேக நபர் தலைமைறைவாகி உள்ள நிலையில் பாண்டிருப்பு மற்றும் துறைநீலாவணை பகுதிகளில் களவாடப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் பல விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
எனவே திருடப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்து உடமையில் வைத்திருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரை அணுகி ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளதுடன் இனிவரும் காலங்களில் தத்தமது உடமை குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் பெரியநீலாவணைக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளான மருதமுனை, பெரிய நீலாவணை ,பாண்டிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் பொதுமக்களின் துவிச்சக்கரவண்டிகள் பல களவாடப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் வழிநடத்தலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான டி.டினேஸ் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”