;
Athirady Tamil News

யாழில் சமுர்த்திப் பயனாளிகளை உடன் மீளாய்வு செய்யுங்கள்! யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை!!

0

யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்குமாறு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ். அரச அதிபருக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

தமது வாகனங்களுக்கான எரிபொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வீடுகளில் பதுக்கிவைத்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ள நிலையில், ஒரு றாத்தல் பாண் வாங்க முடியாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சமுர்த்திப் பயனாளிகாக உள்வாங்கப்படாமல் உள்ளனர் என்ற வேறுபாட்டையும் அவர் விவரித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களில் 70 வீதமானவர்கள் உயர் வருமானம் பெறும் தகுதியற்ற குடும்பங்கள் என, மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பொது வெளியில் குறிப்பிட்டுள்ள கருத்தையும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். அரச அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,

நாட்டில் வறுமை ஒழிப்புத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 78,441 குடும்பங்கள் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இக்குறிப்பிட்ட குடும்பங்களில் ஆயிரக்கணக்கானோர் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, ஏறக்குறைய 15 வருடங்களாக சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளனர்.

மேற்படி மொத்த சமுர்த்திக் குடும்பங்களில் ஏராளமானோர் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதைக் காட்டிலும் உயர் வருமானம் பெறும் குடும்பங்களாவர். நூற்றுக்கணக்கானோர் கூலியாட்களை வைத்து தொழில்களை நடத்தும் முதலாளிகளாவர். பல்லாயிரக்கணக்கானோர் வாகனங்களை வைத்து தினசரி பல்லாயிரம் ரூபாய்களை உழைப்பவர்கள். ஆனால், பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள், கூலித் தொழில் செய்யும் குடும்பங்கள் சமுர்த்திக் கொடுப்பனவுகள் இன்றி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போதைய நிலையின்படி கூறப்போனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் தேடிச்சென்று தமது வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுவந்து வீடுகளில் கலன் கணக்காக சேமித்து வைப்பவர்களும், அத்தியாவசியப் பொருட்களை வீடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்களும் சமுர்த்திப் பயனாளிகளாக இருக்கின்ற அதே நேரம், தினமும் ஒரு றாத்தல் பாண் வாங்கவே கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள அப்பாவிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறான பாரிய வேறுபாடுகளுக்கு மத்தியில்தான் யாழ்.மாவட்ட அரச நிர்வாகம் மக்களுக்கான பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றது என்பது வேதனையான விடயம். இந்த தகவல்கள் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதைவிட வேதனையானது. அதுவும் சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு 70 வீதம் பிழையானது எனத் தெரிந்திருந்தும் அது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்.

யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் அண்மையில் பொது வெளியில் கருத்துக் கூறும்போது, ‘யாழ்.பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி சமுர்த்தி பெறும் 70 வீதமான குடும்பங்கள் உயர் வருமானம் பெறும் தகுதியற்றவர்கள்’ என வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார். (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது) இவ்வாறு தகுதியற்ற குடும்பங்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தித் திட்டங்கள் சென்றுகொண்டிருப்பதை யாழ். மாவட்ட அரச நிர்வாகம் பார்த்துக்கொண்டிருப்பது அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதியாகும்.

நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்ற தற்போதைய சூழலில், வறுமை ஒழிப்பு என்ற பட்டியலில் உள்ள சமுர்த்திக் குடும்பங்களுக்கே தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படுகின்றன. சமுர்த்திக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொடுப்பனவு பெறத் தகுதியற்றவர்கள் 7500 ரூபா பெற்றுக்கொள்கின்ற அதேநேரம், முற்றிலும் தகுதியுடைய, அதி வறுமைக் குடும்பங்கள் காத்திருப்போர் பட்டியல் என்ற பெயரில் வெறும் 5000 ரூபாவைப் பெற்றுக்கொள்கின்றனர். இந்த வேறுபாடு களையப்பட வேண்டும்.

எனவே, யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்திற்கு என பொதுவான கொள்கையின்படி அரசியல் தலையீடுகள் ஏதுமின்றி சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு இடம்பெறவேண்டும்.

1. வீடுகளில் உழைக்கும் வயதுடைய நபர்கள்.
2. வீடுகளில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை
3. தொழில்களின் நிலமை, குடும்ப வருமானம்.
4. குடும்பத் தலைவர் அல்லது குடும்ப அங்கத்தவர்களின் நோய் நிலமை
5. விதவைகள், கைவிடப்பட்டோர், அங்கவீனர்கள்.
6. போர்ப் பாதிப்பிற்கு உட்பட்டவர்கள்

போன்ற, யாழ். மாவட்டத்திற்கு என பொதுவான கொள்கையை வகுத்து, அதன்படி யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் கூறியதைப்போன்று, தகுதியற்ற 70 வீதமான குடும்பங்களையும் நீக்கி, வறுமையில் வாடுகின்ற குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள். மிக விரைவாக இத்திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நன்மைடையவர்.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். அதுபோல, அநீதி செய்வோருக்கும், அநீதிக்கு துணை போவோருக்கும் அறம் கூற்றாகும். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.