யாழில் புதையில் தோண்டிய 7 பேர் கைது!! (படங்கள்)
இருபாலை வீடொன்றில் தங்கப் புதையல் தோண்டுவதற்கு முயன்றதாக ஏழு பேர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் எடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மின் பயன்பாடு அற்ற டெட்டினேற்றர்கள், மின் டெட்டினேற்றர்கள், யூரியா, யூரியாவை வெடிமருந்தாக மாற்றும் ஜெல், கொண்கிறீட் உடைக்கும் உபகரணங்கள் என்பன அவற்றில் அடங்குகின்றன.
பதுளை, மகரகம, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 சந்தேக நபர்களும் புதையல் தோண்டும் பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஏழு பேரும் விசாரணைகளின் பின் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் திலீப் என் லியனகேயின் கீழ் உள்ள தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”