;
Athirady Tamil News

மக்களின் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்குவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் – குமார் குணரட்னம் !!

0

மக்களின் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்குவது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குமார் குணரட்னம் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கிவிட்டு இருப்பதனாலேயே பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். கடந்த 74 வருடங்களாக இதே நிலைமையே காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவோ ஐக்கிய தேசிய கட்சியோ ஐக்கிய மக்கள் சக்தியோ ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு பதிலாக மக்கள் தமது அதிகாரத்தை உருவாக்குவது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். மக்கள் வாக்களித்து விட்டவுடன் கடமை முடிந்துவிட்டதாக தற்போது நிலைமை காணப்படுகின்றது.

கிராம மட்டத்தில் இருந்து மாவட்ட என தேசிய ரீதியில் ஜனநாயக அடிப்படையில் தேசிய பேரவை உருவாக்க வேண்டும்.அது கடினமான விடயம்.தற்போது இடம்பெறுகின்ற போராட்டங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அல்ல. அதற்கும் மேலாக அதற்கு வெளியால் இடம்பெறுகின்ற விடயங்களே ஆகும். அந்தப் போராட்டத்தின் நோக்கம் தற்போது வரை எட்டப்படவில்லை. இருந்தாலும் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

சுயாதீனமான மக்கள் போராட்டங்களிளாலேயே இது உருவானது.கஸ்டமான விடயமாக இருந்தாலும் இதுவே வழி. 74 வருடங்களாக தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இதனாலேயே மக்கள் அதிகாரத்தை உருவாக்க வேண்டும்.

மக்கள் அதிகாரம் உருவாகும் போது அரசாங்கங்கள் இருக்கும். ஆனாலும் அரசாங்கங்கள் தாங்கள் நினைத்ததை போன்று நடக்க முடியாது. மக்கள் அதிகாரத்துடன் பேசியே செயற்பட முடியும். தற்போதைய மக்கள் அதிகாரம் காணப்படுகிறது. ஆனால் அதுவொரு அமைப்பாக உருவாக வேண்டும்.யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் அதிகாரத்துடன் பேசியே செயற்பட வேண்டும்.

நிறைவேற்றதிகார முறை இல்லாமல் செய்யப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பை மக்கள் மத்தியில் நடத்தி புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். அது வெளியில் இருந்து பெறப்பட வேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசியபோதும் இதற்கு உடன்பட்டார்கள். நிறைவேற்று அதிகார முறையை இல்லாமல் செய்து தேசிய பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணப்பட வேண்டும்.

இனவாதம் இன ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்களை கொண்டு வரவேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட்டாலே பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.சாதாரண மக்களிடம் அறவிடப்படும் வரியே 88 சதவீதமாக காணப்படுகின்றது. இந்த முறை மாற்றப்பட்டு செல்வந்தர்களிடமும் முதலாளிகளிடம் வரியை அறவிட வேண்டும். வரி ஏய்ப்பு செய்த தம்மிக பெரேராவை பஸில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு கொண்டு வரவுள்ளனர்.பொருளாதார நெருக்கடிக்கு எதுவித பதிலும் சொல்லாத பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரச்சனையின் ஆழம் தொடர்பிலேயே கூறுகின்றார் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.