கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருள் !!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று (12) வெளியிட்ட பதிவிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.
24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்கவும் நிலையான எரிபொருள் விநியோகம் சாத்தியமாகும் வரையும் வாராந்தம் கோட்டா முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவதற்காக டீசல், நப்தா மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றுக்காக மாதமொன்றுக்கு100 மில்லியன் டொலர் கூடுதலாக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
4 மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மாதாந்த எரிபொருள் செலவு தற்போது 550 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாகவும் எரிவாயு பற்றாக்குறையால் மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தடையில்லா மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் சீராகும் வரை, எரிபொருள் வரிசை முகாமைத்துவம் சாத்தியமற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு வாரத்துக்கு முகாமைத்துவம் செய்யும் எரிபொருளை நிதிக் கட்டுப்பாடுகளுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்வதாகவும் ஆனால் சில நுகர்வோர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் மின்பிறப்பாக்கிகளுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலான காலப்பகுதிக்கு எரிபொருளை சேகரிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.