;
Athirady Tamil News

பணம் அச்சிடுவதை உடன் நிறுத்தவும்: சி.வை.பி ராம் !!

0

அரசாங்கம் பணம் அச்சிட எடுத்திருக்கும் தீர்மானத்தால் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பதுடன் பணவீக்கமும் அதிகரிக்கும். ஆகையால், பணம் அச்சிடும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிடவேண்டுமென பொருளாதார ஆலோசகரும் ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளருமான சீ.வை.பி ராம் தெரிவித்தார்.

அரசாங்கம் பணம் அச்சிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதாரத்தை முன்னேற்ற பணம் அச்சிடுவது எந்தவொரு நாட்டினதும் கொள்கை அல்ல. மாறாக நாட்டுக்குள் உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் மூலமே பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தலாம். ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பிரதானமாக இருக்கவேண்டியது, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையாகும் என்றார்.

பணம் அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருட்களின் விலைகளும் மென்மேலும் அதிகரிக்கும். இதனால் மக்களின் கைகளில் பணம் இருந்தாலும் கொள்வனவு செய்ய பொருட்கள் இருக்காது. புதிய பிரதமர் ஆட்சிக்கு வந்த பின்னர் பொருட்களுக்கான வரியை அதிகரித்ததைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை. அதனால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடுவதைத் தவிர வேறு வழியில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். பணம் அச்சிட்டு அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதைவிட சம்பளம் வழங்காமல் இருக்கலாம். ஏனெனில் பணம் அச்சிடுவதால் ஏற்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அவர்களின் சம்பள பணத்துக்கு பெறுமதி இல்லாமல் போகும் என்றார்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு இல்லாமல் வீதிகளில் காத்துக்கொண்டிருக்கின்றனர். கொழும்பில் சில பிரதேசங்களுக்கு பல நாட்களாக சமையல் எரிவாயு விநியோகிக்கவில்லை. அதனால் அந்த மக்கள் இரண்டு நேரம் மாத்திரம் சாப்பிடும் நிலையில் இருக்கின்றனர். அதேபோன்று எரிபொருளுக்கான வாகன வரிசை அதிகரித்து செல்கின்றது என்று தெரிவித்த அவர், எனவே பணம் அச்சிட்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு முடியாது என்பதை பிரதமர் ரணில் விக்ரசிங்க உணர்ந்து, பணம் அச்சிடுவதை நிறுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.