கனமழை எதிரொலி- அசாம் நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி..!!
அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள போரகான் அருகே நிசார்பூரில் கனமழையால் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் நிலச்சரிவால் ஏற்பட்ட இடியாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர குழுவினர் சடலங்களை மீட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேரும் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் என்றும், கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் பின்னர் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் நந்தினி காகதி கூறியதாவது:- வீட்டில் நான்கு கூலித்தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மண் சரிவு வீட்டிற்குள் புகுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து உள்ளூர் வாசிகளிடம் இருந்து தகவல் தெரியவந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டன. இதில் மூன்று பேர் துப்ரிசையச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கோக்ரஜாரைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.