அண்ணாமலைக்கு எதிராக செ.கு.தமிழரசன் தலைமையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்..!!
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சில அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தின. குறிப்பிட்ட அவமதிக்கும் வார்த்தைக்காக வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் கண்டித்தன. இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை (புதன்கிழமை) பகல் 2 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் கே.மங்காபிள்ளை, சி.எஸ்.கவுரி சங்கர், பி.தன்ராஜ், வக்கீல் வா.பிரபு, டி.இருதய நாதன், என்.ரமேஷ்குமார், செம்மை அ.தனசேகர், என்.சம்பத், சா.சாலமோன், வக்கீல். துர்வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.