;
Athirady Tamil News

டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் 25 சதவீத விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன..!!

0

தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜுன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் இன்றுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவதால் இன்று நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகளில் மீனவர்கள் செல்ல தயார் நிலையில் உள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவவது வழக்கம். இதனால்மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் இருந்து 25 சதவீத விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தெரிகிறது. 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே விசைப்படகுகளில் கொண்டு செல்லும் ஐஸ்கட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும். கடுமையான டீசல் விலை உயர்வால் தொடர்ந்து இந்த தொழிலை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது.

எதிர்பார்த்த அளவு மீன் சிக்க வில்லை என்றால் அதிக நஷ்டத்தை சந்திக்க வேண்டும். இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. 25 சதவீதம் அளவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன என்றார். மீன்பிடி தடைகாலத்தில் மீன்விலை அதிகஅளவு உயர்ந்து இருந்தது. தற்போது விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.