;
Athirady Tamil News

மானிய விலையில் விவசாயிகளுக்கு விதைகள் விற்பனை – கலெக்டர் தகவல்..!!

0

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-22 ம் வருடம் சொர்ணவாரி காரீப் பருவத்தில் சுமார் 2200 ஹெக்டேர் நெல், சிறுதானியங்கள் சுமார் 3708 ஹெக்டேர். பயறுவகை 7702 ஹெக்டேர். மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் 14246 ஹெக்டேர் பயிரிடப்பட்டது. சொர்ணவாரி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பயன்படுத்தி சாகுபடி செய்தால் 40 சதவீதம் அளவு நீரை சேமிக்கலாம். நெல் சாகுபடி செய்துள்ள வரப்புகளில் பயறுவகை பயிர் விதைகளை நடவு செய்தால் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும்.

வரப்புகளில் உள்ள பயறுவகை பயிர்களில் உள்ள சாறு உறுஞ்சும் பூச்சியை உண்பதற்காக வரும் வண்டு மற்றும் ஊசி தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் நெல் பயிரை தாக்கக்கூடிய குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு மற்றும் புகையான் பூச்சிகளையும் உண்பதால் நெல் பயிருக்கு பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் செலவினம் குறையும். தற்போது சொர்ணவாரி பருவத்தில் சாகுபடிக்கு தேவையான ஏற்ற ரகங்களான ஏடிடீ 37,42 கோ 51 சான்றுநிலை நெல் விதைகள், 15 மெட்ரிக் டன்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல் தவிர சிறுதானியங்கள் 7 மெட்ரிக் டன், பயறுவகை விதைகள் 15 மெட்ரிக் டன், நிலக்கடலை விதைகள் 40 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வரப்பு பயிருக்கு தேவையான அனைத்து விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மான்யத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து பயிர்சாகுபடிக்கு தேவையான நுண்ணுட்ட மற்றும் உயிர் உரங்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து இடுபொருட்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே வேலூர் மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.