;
Athirady Tamil News

உக்ரைனில் அழிக்கப்படும் உணவு தானியங்கள்… விவசாயிகள் கண்ணீர்..!!

0

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் உக்கிரமான தாக்குதலால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உலக தானிய சந்தையில் முக்கிய இடம்பிடித்துள்ள உக்ரைனில், தற்போது நடத்தப்படும் தாக்குதல்களால் உணவு தானியங்கள் அழிந்து வருகின்றன. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், தற்போது அறுவடை செய்யப்படும் தானியத்தை சேமிக்கவும் இடமில்லாத நிலை உள்ளது.

உக்ரைன் போரால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், உக்ரைனில் உள்ள உணவு தானிய கிடங்குகள் அழிக்கப்படும் அவலமும் அரங்கேறுகிறது. உக்ரைனில் விவசாயம் செழிக்கும் கிழக்கு பகுதியில் தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டான்பாஸ் பகுதியை கைப்பற்றுவதற்காக ரஷிய படைகள் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. கருங்கடல் துறைமுக பகுதியான மைகோலைவில் உணவு தானிய கிடங்கை ரஷிய ஏவுகணைகள் தகர்த்துள்ளன. இந்த தானிய கிடங்கில் மட்டும் 3 லட்சம் டன் கோதுமை, மக்காச்சோளம், சூரியகாந்தி விதைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அவை முற்றிலும் நாசமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வயல்களில் குறுக்கும் நெடுக்கும் செல்லும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளால் டான்பாஸ் கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது. தீயை அணைக்க முயற்சிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் என்ன செய்தோம்? வயல்களை எரிப்பதால் என்ன கிடைக்கப்போகிறது? என அவர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் விலைவாசி உயர்வு தொடரும், பட்டினிச்சாவு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.