அலுவலகத்தில் பாலின பாகுபாடு- பெண் ஊழியர்களுக்கு ரூ.922 கோடி இழப்பீடு வழங்க கூகுள் ஒப்புதல்..!!
பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவனம் சுமார் ரூ.922 கோடி இழப்பீடு தர ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் அலுவலகத்தில், பாலின பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அலுவகத்தில், அனுபவம் வாய்ந்த பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், ஊதியம் வழங்குவதிலும் வேறுபாடும் காட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மமான பதவிகளில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியத்தையே கூகுள் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து 2017ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், 2013ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் அலுவலகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் பாலியல் சமன்பாட்டுடன் இருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. இதேபோல கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை கூகுள் அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.