சுற்றுலா வருகையை சுருக்கிய வரிசை !
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இலங்கையின் நிலைமையை அவதானிக்கும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் தற்போதுள்ள எரிபொருள் வரிசைகளை கண்கூடாக காண்பதாகவும் எரிபொருள் பெறுவதற்காக முழு நாளையும் வரிசையில் செலவிட நேரும் என்பதை அவர்களும் புரிந்து கொள்வார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது விடுமுறையை அனுபவிப்பதற்காகவே தவிர, வரிசையில் நின்று நேரத்தை செலவிடுவதற்காக அல்ல என்று தெரிவித்த அவர், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த சுற்றுலாப் பருவம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சாத்தியமான சுற்றுலாப் பயணிகள் எந்த இடத்துக்குச் செல்வது என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
டொலர்களை வரவழைக்கும் வகையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நாட்டின் தலைவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
தொழில்துறையின் பங்குதாரர்களுடன் தனித்தனி சந்திப்புகளை நடத்துவதால், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் ஒரே பக்கத்தில் இல்லை என்பது தெளிவாகிறது என்றும் தெரிவித்தார்.