ஹர்ஷவின் கருத்தை மறுத்தார் நஷீட் !!!
இலங்கைக்கு உதவுமாறு தாம் விடுத்த கோரிக்கைகளை வெளிநாடுகள் நிராகரித்ததாக வெளியான செய்தியை மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார்.
பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும், அதற்கான உதவிகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் இன்றையதினம் (04) டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை தொடர்பு கொள்ள நஷீட் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பேசிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான ஹர்ஷ டி சில்வா, பல நாடுகள் இலங்கைக்கு உதவ மறுத்துவிட்டதாக ஊடகங்களுக்கு, நேற்று (13) தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு உறுதியான திட்டம் உள்ளதா என சவூதி அரேபியாவின் முடி இளவரசர் மொஹமட் பின் சல்மான் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இலங்கை தனது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான உறுதியான திட்டத்தை உருவாக்கும் வரை இந்த விவகாரத்தை பற்றி பேச வேண்டாம் என தெரிவித்துள்ளதாக நஷீட் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர் ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம், விற்கப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலை இலங்கை அனுப்பினால் அது குறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
ஹர்ஷ எம்.பியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தசபாநாயகர் மொஹமட் நஷீட், இது தொடர்பான அறிக்கைகள் தவறானவை என்றும் பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும், அதற்கான உதவிகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக இலங்கைக்கு வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான ஒருங்கிணைப்பாளராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நஷீட் சமீபத்தில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.