ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டம்- பிரதமருக்கு, உள்துறை மந்திரி பாராட்டு..!!
ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. அக்னிபத் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேசபக்தியுடன், துடிப்புமிக்க இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான வயது வரம்பு 17 வயது முதல் 21 வயதாகும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும் வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும். முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70 சதவீத தொகை வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்திற்காக பிரதமருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தத் திட்டம் இளைஞர்களிடம் உள்ள திறன்களை மேம்படுத்தி நாட்டில் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தும்.நாட்டிற்கும் தங்களுக்கும் பொன்னான எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த வாய்ப்பாகும். நரேந்திர மோடியின் தொலைநோக்குள்ள முடிவு இந்தியாவின் இளைஞர்களுக்கு ஒழுக்கம், திறமை, உடல்தகுதி, ஆகியவற்றோடு அவர்களை பொருளாதார ரீதியில் தற்சார்பு உடையவர்களாக மாற்றும். தற்சார்பு இந்தியா என்பதற்கான அடித்தளத்தை இது உருவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.