;
Athirady Tamil News

பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்- அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் உத்தரவு..!!

0

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மக்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள துறையான வருவாய்த்துறை, அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அத்தகைய முக்கியமான இத்துறையின் மூலமாக பல சேவைகளை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கொண்டு சேர்த்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளவில் உள்ள சேவைகள், எந்த தாமதமுமின்றி உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் மாவட்ட அளவிலான செயல்திறன் குறித்தும், எங்கு அதிகமாக பணிகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் களைவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நடைமுறையை மாற்றி அமைத்து அதை எளிதாக அவர்களுக்கு வழங்க வேண்டிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சான்றிதழ் விண்ணப்பிக்கும் போது, மீண்டும், மீண்டும் பொதுமக்கள் தங்கள் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலை தேவையில்லை என்ற நிலையை விரைவாக கொண்டு வர வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஆன்லைன் பட்டா பரிமாற்றத்தின் முன்னேற்றம், அப்பணிகள் தாமதமின்றி செயல்படுகிறதா என்பதையும், விண்ணப்பங்களின் நிலையை அவ்வப்பொழுது விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளும் வழிமுறைகளையும் எளிதாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதேபோல, ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதியோர், ஆதரவற்ற விதவை, கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஓய்வூதியம் மற்றும் பல பயன்கள் பெறுவதற்காக 4,816 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்தத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.