வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை..!!
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ரூ.60.22 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வுக்கு எதிரான முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரல் நியாயமானது. பல சட்ட போராட்டங்களில் வெற்றி பெற்றதுபோல் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்திலும் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது. எனவே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். இந்தக் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 9 ஆயிரத்து 494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பது உண்மை தான். செல்போனை மாணவர்கள் வகுப்பறைகளுக்கு கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவை மீண்டும் தரப்படமாட்டாது. மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளனர். எனவே 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறந்து 5 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படமாட்டாது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு நாள்தோறும் 2 மணிநேரம் உளவியல் பயிற்சிகள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும். தனியார் பள்ளியில் கட்டாய மாற்றுச் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். தற்போது 90 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தாத 10 சதவீத மாணவர்கள் சுகாதாரத் துறை மூலமாக உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.