;
Athirady Tamil News

விவசாயத்தை பாதுகாக்க எரிபொருள் விநியோகத்தை சீர் செய்யுங்கள்!!

0

அரசாங்கம் உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வதுடன் விவசாயத்தினைப் பாதுகாப்பதற்கு சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை காலை அச்சுவேலி சந்தையில் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

அப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டக்கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் வாரங்களில் உணவுப்பொருட்கள் கிடைக்கிமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர்.

அரசாங்கம் உணவுப் பாதுகாப்பினையும் அத்தியவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற பொறுப்பினையும் நிறைவேற்ற தவறியுள்ளது. அடிப்படையில் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது.

இத் துர்ப்பாக்கிய நிலைமைக்கு உரக்கொள்கை போன்ற விடயங்களில் அரசாங்கம் பின்பற்றிய தவறான நடவடிக்கைகள் பிரதான காரணமாகும். நாம் இயற்கை வழி உரப்பாவனையுடன் கூடிய விவசாய முயற்சிகளை நாம் வரவேற்கும் அதேவேளை குறுங்காலத்தில் இயற்கை உரப்பாவனையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தினை நாட்டில் வெற்றியடையச் செய்ய முடியுமா என படித்தவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் ஜனாதிபதி ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். விவசாயிகளுடன் கலந்துரையாடியிருக்கவேண்டும்.

இன்று எமது நிலங்களில் நாம் விவசாயத்தினை முன்னெடுப்பதற்கு உரிய தடைகள் இன்றி எரிபொருளை விநியோகிக்கக் கோருகின்றோம். காரணம் விவசாயிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அவர்களது தொழில் முயற்சிகளை மேற்கொள்வற்கான குறைந்த பட்ச எரிபொருள் விநியோகத்தை ஏனும் பெற முடியாது திண்டாடுகின்றனர் என்பதை வெளிப்படுத்தவதற்காகவே திரண்டுள்ளோம்.

விவசாயிகள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியாத சூழல் விவசாய உற்பத்தியாளர்களை மாத்திரம் பாதிக்கும் தொழில்சார் பிரச்சினை கிடையாது. மாறாக அத்தனை மக்களது வயிற்றுப்பசியைப் போக்குவது சார்ந்த பிரச்சினையாகும். அரசாங்கம் தாமதமின்றி இவ்விடயத்தில் பொறுப்புச் சொல்லவேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.