;
Athirady Tamil News

இளம் பெண் கொலை; வைத்தியரின் தண்டனை உறுதியானது !!

0

மருத்துவ ஆலோசனை பெற வந்த திருமணமாகாத இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மருத்துவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட வைத்தியர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக வந்த பெண்ணை தனது அறைக்குள் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, வைத்தியசாலையின் ஆறாவது மாடியின் ஜன்னலுக்கு வெளியே தள்ளி கொலை செய்தமை ஆகிய இரண்டு அதிகுற்றச்சாட்டு பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து, குறித்த வைத்தியருக்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் மரண தண்டனை, 15 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை உறுதி செய்ததுடன் அது நியாயமானதும் சட்டமானதும் என தீர்ப்பளித்தது.

2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் இணைக்கப்பட்ட வைத்தியர், 2014 ஆம் ஆண்டு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சம்பத் அபேகோன் மற்றும் பி. குமாரரட்ணம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, கொலைக்கு ஒரு நிமிடம் முன்பு வரை குற்றம் சாட்டப்பட்டவரின் அறையில் பெண் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளமை நீதிமன்றத்துக்கு தெரியவந்தது.

குறித்த பெண் இறக்கும் போது உள்ளாடையில் இருந்தமை மற்றும் கற்பழிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.