சாவகச்சேரி மருத்துவமனை பெண் தாதிய உத்தியோகத்தருக்கு நள்ளிரவில் அச்சுறுத்தல்!!
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவுக் கடமையிலிருந்த போது தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவமனை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், சாவகச்சேரி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் கடந்த புதன்கிழமை (ஜூன் 8) நள்ளிரவு கடமையில் ஈடுபட்டிருந்த போது தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அது தொடர்பில் மருத்துவமனை அத்தியட்சகரிடம் முறையிட்ட வழங்கிய பெண் தாதிய உத்தியோகத்தர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
சம்பவத்தையடுத்து அச்சுறுத்தியவரும் அதே மருத்துவமனையில் கடமையாற்றும் ஆண் தாதிய உத்தியோகத்தர் என பொலிஸ் புலன் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சம்பவம் தொடர்பில் அறிக்கையளிக்குமாறு சாவகச்சேரி மருத்துவமனை மருத்துவ அத்தியட்சகருக்கு பணித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன், பொலிஸாரும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”