விலையை உயர்த்த லிட்ரோ திட்டம் !!
3,900 மெற்றிக் தொன் எரிவாயு என்பது மிகச் சிறிய தொகை என்று தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ், அந்த தொகையால் இந்த பாரிய எரிவாயு நெருக்கடியை தீர்க்க முடியாது என்று கூறுவதற்கு வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ காஸ் டெர்மினல் லங்கா லிமிடெட் ஆகியவற்றின் தலைவராக இன்று (15) கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
லிட்ரோவின் முன்னாள் நிர்வாகிகள் 3,900 மெற்றிக் தொன் எரிவாயு கப்பலைத் தவிர எவற்றையும் ஒதுக்கீடு செய்யாமல் வெற்றுக் கடலை மட்டுமே விட்டுச் சென்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளனர் என்றும் தரையிறங்குவது அல்லது பணம் செலுத்துவது தொடர்பாக குறைந்தபட்சம் விநியோகஸ்தர்களிடம் கூட பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைக்கு நிகராக லிட்ரோ சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்படும் என்று வெளியான செய்தியை மறுத்த அவர், சிலிண்டரின் விலையை 200 ரூபாயினால் அதிகரிக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
மூன்று அல்லது நான்கு எரிவாயு விநியோகஸ்தர்களிடம் பேசியும் முந்தைய நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
அமைச்சரவை உப குழுவின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஓமான் நிறுவனத்திடமிருந்து நான்கு மாதங்களுக்கு உள்நாட்டு எரிவாயுவை நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.