இன்று தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம்!!
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார மற்றும் நாளாந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று (15) தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ரயில் சேவைகள் குறித்து தெரிவிக்கையில், தற்சமயம் ஆகக்கூடுதலானோர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றார்கள், இதனால் புதிய திட்டத்தின் கீழ் ஆகக்கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து கண்டிக்கான சொகுசு ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. களனிவெலி ரயில் பாதையில் இன்று புதிய அலுவலக ரயில் ஒன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றது. கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை வார இறுதி நாட்களில் ஒழுங்கு செய்யப்பட இருக்கின்றது என்றும் கூறினார்.
புதிய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் சிசுசரிய என்ற மாணவர்களுக்கான பஸ் சேவையும் விஸ்தரிக்கப்பட இருக்கின்றது. இதன் கீழ் புதிதாக மேலும் இருபது பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஒரு மாதத்திற்குள் இந்த பஸ்களின் எண்ணிக்கை 50 வரை அதிகரிக்கப்பட இருக்கின்றது.
இதேவேளை, பார்க் அன்ட் ரைவ் என்ற போக்குவரத்து சேவை இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. மாக்கும்புர, கடவத்த, கட்டுபெத்த, கொழும்பு கோட்டை ஆகிய இடங்களுக்கு இந்தச் சேவை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. காலை 6.30 தொடக்கம் காலை எட்டு மணி வரை பத்து நிமிடங்களுக்கு ஒருதடவை இந்த பஸ் சேவை அமுற்படுத்தப்பட இருக்கின்றது.
மாலை வேளை 4 மணி தொடக்கம் 6 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை பார்க் அன்ட் ரைவ் போக்குவரத்துச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.