டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள் நுழைந்ததற்கு எதிர்ப்பு- ப.சிதம்பரம் கண்டனம்..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பியுமான ராகுல்காந்தி கடந்த மூன்று நாட்களாக மத்திய அமலாக்கத் துறையினரின் விசாரணையை எதிர்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்கள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது மூத்த தலைவர்கள் உட்பட சுமார் 240 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி சட்டம் ஒழுங்கு காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரி சாகர் ப்ரீத் ஹூடா, தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று அக்பர் சாலையில் காங்கிரசார் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரிகள் சிலர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்ததாக புகார் எழுந்துள்ளது. அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் தலைவர்களை விரட்டி அடித்த போலீசார், சிலரை வெளியே இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையகத்தில் காவல்துறையின் நடவடிக்கை மூர்க்கத்தனமான சுதந்திர மீறல் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் அனைத்து சட்ட மற்றும் அரசியல் விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது என்றும் தமது விட்டர் பதவியில் அவர் கூறியுள்ளார். போலீசாரிடம் வாரண்ட் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து, எம்.பி.க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்களை வெளியே இழுத்து சாலையில் வீசினர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். போலீசார் முரட்டுத்தனம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இது அப்பட்டமான கிரிமினல் அத்துமீறல் என்றும், டெல்லி காவல்துறையின் அராஜகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் புகுந்தது தொடர்பாக டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வ முறையில் புகார் அளித்தது. கிரிமினல் அத்துமீறலுக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறு செய்த காவலர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.