விரைவில் 5ஜி தொழில்நுட்ப சேவை- மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி உறுதி..!!
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைளை டிராய் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் வழங்கப்படவுள்ள 5ஜி சேவை, 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், தொலைத்தொடர்பு என்பது டிஜிட்டல் நுகர்வுக்கான முதன்மை ஆதாரமாகும் என்றார்.
5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை இறுதிக்குள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார். தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என்றும், விரைவில் 5ஜி சேவைகளை கொண்டு வர முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
5ஜி சேவைகளுக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பம், நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும், இது ஒரு முக்கிய சாதனையாக இருக்கும் என்றார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் முழு அளவிலான 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு யு.பி.ஐ. மூலம் 5.5 பில்லியன் பண பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை என்றும் மத்திய மந்திரி குறிப்பிட்டார்.