திருப்பதியில் பாதாள சாக்கடையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி..!!
திருப்பதி வைகுண்டபுரம், தும்மலகுண்டா சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் செய்தனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஆறுமுகம் (வயது 22), மகேஷ் (35) ஆகியோர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ஜெட் வாகனத்தை அப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பாதாள சாக்கடையில் குழாயை செலுத்தி அடைப்பை அகற்ற முயன்றனர். ஆனால் வாகனத்தின் மூலம் அடைப்பை அகற்ற முடியவில்லை. இதையடுத்து மகேஷ் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை அகற்ற முயன்றார்.
பாதாள சாக்கடைக்குள் இறங்கிய மகேஷ் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் பாதாள சாக்கடைக்குள் இறங்கினார். அவரும் வெளியே வரவில்லை. இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் லட்சன்னா(22) என்பவரும் பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது விஷவாயு அவரையும் தாக்கியது. சுதாரித்துக்கொண்ட லட்சன்னா மூச்சை பிடித்துக்கொண்டு மேலே வந்து கத்தி கூச்சலிட்டார். அருகிலிருந்தவர்கள் லட்சன்னாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதாள சாக்கடையில் இறங்கி பார்த்தபோது அங்கு விஷ வாயு தாக்கி மகேஷ், ஆறுமுகம் இறந்து கிடந்தனர். 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.