எரிபொருளை கொள்வனவு செய்ய எதிர்க்கட்சி புது யோசனை!!!
ஆறுமாத கால அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கடனுதவியை பெற்று, எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காரே இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைமைகளை மக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகிறார். பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் பிரதமரே நாட்டுக்குத் தேவை, மாறாக ஊடகவியலாளர் போல் செயல்படும் பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.
விடுமுறையை கழிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஆனால் எமது நாட்டில் இத்தனை வரிசைகள் காணப்படுகின்றன. எனவே இந்த வரிசைகளைப் பார்த்து பின்னரும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.தற்போது எரிபொருளுக்கு செலவிடப்படும் நிதியை உரத்தை கொள்வனவு செய்ய செலவிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்வதால் நாட்டில் ஏற்படவிருக்கும் ஒரு தட்டுப்பாட்டை தடுக்க முடியும் எனவும், கொழும்பிலுள்ள விகாரமாதேவி பூங்கா உள்ளிட்ட இடங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள காணிகள் பெறுமதியுடையவை. அது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் விவசாய நடவடிக்கைகள் என கூறிக்கொண்டு கொழும்பில் உள்ள பெறுமதிமிக்க காணிகளை அரசாங்கத்தின் நண்பர்களுக்கு வழங்க திட்டங்கள் தீட்டப்படுகின்றனவா? என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.