;
Athirady Tamil News

தினேஷின் அறிக்கைக்கு எதிர்ப்பு: மனோ கணேசன் !!

0

பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவில் ஏற்படாத உடன்பாடுகளையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் உள்ளடக்கி இந்த இறுதி அறிக்கையை தெரிவுக்குழு தலைவர் சமர்பித்துள்ளார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமானால் அங்கும் அதை நாம் எதிர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த போலி அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவுக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

கலப்பு முறையை ஆதரிக்க முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டீ பி) தமக்கு தெரிவித்துள்ளதாக குழு உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவுக்குழுவில் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் கலப்பு முறைக்கு இணங்காது என நான் நம்புகிறேன். இந்நிலையில் மிக பெரும்பாலான கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு விரோதமாக இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் மனோ கணேசனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறை சீர்திருத்தங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தண தனது இறுதி அறிக்கையை குழுவில் நேற்று (நேற்று முன்தினம்) சமர்பித்தார். இதையடுத்து பெரும்பாலான தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்தனர்.

இந்த குழுவில் இடம் பெறாத அதேவேளை இடம் பெற்றும் நேற்றைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத கட்சி பிரதிநிதிகளின் ஆதரவையும் திரட்டி சுருக்கமான மாற்று நிலைப்பாட்டை எழுத்து மூலமாக தெரிவுக்குழுவுக்கும், பாராளுமன்றத்துக்கும் அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாற்று நிலைப்பாட்டு அறிக்கையை சுமந்திரன் எம்.பி தயாரிப்பார்.

அதை அடிப்படையாக கொண்டு ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்று, தெரிவுக்குழுவுக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் முறைமை தொடர்பான எமது நிலைப்பாடுகளை நாம் தெரிவிப்போம் என்றும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.