அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பீகாரில் இளைஞர்கள் வன்முறை- ரெயிலுக்கு தீவைப்பு..!!
மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை ‘அக்னிபாத்’ என்ற ராணுவத்தில் ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தினார். அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர். 17 வயது முடிந்து 6 மாதம் ஆனவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்ட வர்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு சேர்க்கப்படுவார்கள்.
அதன் பின்னர் பெரும்பாலானவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது. முந்தைய திட்டத்தின்படி குறைந்தபட்சம் 15 ஆண்டு காலம் பணிபுரியலாம் என்ற நிலையில் புதிய ஆள் சேர்ப்பு நடைமுறையில் 4 ஆண்டுகால பணி காலம் குறைக்கப்பட்டது இளைஞர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக நாட்டின் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடந்தது. இன்றும் 2-வது நாளாக அங்கு போராட்டம் நீடித்தது. பாட்னா, முசாபர்பூர், பக்கர், ஜெகனாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், ரெயில் நிலையங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி வன்முறையில் ஈடுபட்டனர்.
பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசினார்கள். அதோடு ரெயிலின் ஒரு பெட்டியிலும் தீ வைத்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் போலீசார் மீது இளைஞர்கள் கற்களை வீசினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். இந்த வன்முறை காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.