கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: நாராயணசாமி-வைத்திலிங்கம் எம்.பி. உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது..!!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது. பொய் வழக்கு போட்டு ராகுல் காந்தியை விசாரணை செய்வதாக கூறி நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதுபோல் புதுவை காங்கிரஸ் கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி இன்று கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடைபெறும் என புதுவை காங்கிரசார் அறிவித்தனர். இதன்படி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நீல கங்காதரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, வீரமுத்து, ரகுமான், வினோத் உள்பட பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் படேல் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ஜென்மராக்கினி கோவில் வழியாக ஆம்பூர் சாலையை வந்தடைந்தது.
அங்கு போலீசார் பேரிகார்டு அமைத்து காங்கிரசாரை தடுத்தனர். பேரிக்கார்டு மேல் ஏறி நின்று காங்கிரசார் கோஷம் எழுப்பினர். ராகுல்-சோனியா மீது பொய் வழக்குப்பதிவு செய்ததை கண்டிக்கிறோம் என்றும் மத்திய பா.ஜனதா அரசு மற்றும் பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். அதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் போலீசார் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. உள்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.