இளைஞர்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும்- அக்னிபாத் திட்டத்தை வரவேற்ற யோகி ஆதித்யநாத்..!!
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசினார்கள். அதோடு ரெயிலின் ஒரு பெட்டியிலும் தீ வைத்தார்கள்.
எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர். வேலையில்லா இளைஞர்களை அக்னிப் பாதையில் நடக்கவிட்டு, அவர்களின் பொறுமை மீது அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தையும் அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பொன்னான அடித்தளத்தையும் கொடுக்கும் என அவர் கூறி உள்ளார். மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் ராணுவ வீரர்களுக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறை மற்றும் இதர பணிகளுக்கான ஆட்சேர்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.