;
Athirady Tamil News

கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்ட நியூசிலாந்து தூதுவர் !!

0

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இன்று (16) காலை இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டனிடம் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதன் மூலம் மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் நியூஸிலாந்து உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, ஆளுநரின் ஆலோசனைக்கமைய கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் ‘நிலைபேறான பால் பண்ணை திட்டம்’ நியூசிலாந்து உயர் ஸ்தானிகரினால் பாராடப்பட்டது. அது தொடர்பில் அவசியமான உதவிகளை வழங்குவதாக, உயர் ஸ்தானிகர் இதன்போது ஆளுநரிடம் உறுதியளித்தார்.

அதுமட்டுமல்லாமல், திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலரை இன்று நியூசிலாந்து நாட்டின் இலங்கைக்கான துதுவர் மைக்கல் அபல்டன் திருகோணமலை Trincomalee blue நட்சத்திர விடுதியில் சந்தித்தார்.

இரண்டு நாட்களாக திருமலை பிரதேசத்திற்கு விஜயம் செய்து, திருமலை மாவட்ட அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து வருகின்ற இதேவேளை, இன்று சிரேஷ்ட ஊடகவியலாளர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையை எவ்வாறு ஊடகவியலாளர்கள் எதிர் கொள்கின்றார்கள் என பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் செய்யப்பட உள்ள திட்டம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் பசி பட்டினியோடு வாழ்கின்ற மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் மூலம் பல்வேறு உதவிகளை வழங்க காத்திருப்பதாகவும், இதன்போது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஊடகவியலாளருக்கு தெரிவித்தார்

மேலும், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற விவசாயம் மற்றும் கால்நடை விவசாயத்திற்கு பல்வேறு உதவிகளை நியூசிலாந்து அரசாங்கத்திடமிருந்து பெற்று வழங்குவதற்கு முயற்சி செய்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் நியூசிலாந்து தூதரகம் ஸ்தாபிக்கப்பட்டு சுமார் ஒரு வருடம் கடந்துள்ளதோடு, அதன் மூலம் இலங்கைக்கு வந்துள்ள முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகராக மைக்கேல் அப்பிள்டன் விளங்குகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.