பொதுமக்களுக்கும் பெற்றோல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு -வீதி மறியல் போராட்டம்!! (படங்கள்)
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியறிந்து அங்கு சென்ற பொதுமக்களுக்கும் பெற்றோல் உரிமையாளர் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீதி மறியல் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஒன்று கூடிய மக்களை கலைப்பதற்காக சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கோபமடைந்துள்ள மக்களே இவ்வாறு வீதி மறியல் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் கல்முனை அம்பாறை பகுதியில் இருந்து கொழும்பு செல்லும் பொது போக்குவரத்து பேரூந்துகள் மக்களின் போராட்டத்தினால் திருப்பி அனுப்பப்படுவதை காண முடிந்தது.
மேலும் அடிக்கடி இவ்வாறு இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்படுகின்ற முரண்பாட்டினால் ஏற்கனவே நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதுடன் பொதுமக்களுக்கான ஒரு ஆரோக்கியமான சேவையினை இவ்வெரிபொருள் நிலையம் வழங்குவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தற்போது கூட பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி இவ் எரிபொருள் நிலையத்திற்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்பில் இல்லை என அங்கிருப்பவர்கள் மறுப்பதுடன் பொதுமக்களுடன் அடிக்கடி முரண்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாட்டினால் பொது போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் மக்கள் வீணான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தவிர எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதன் காரணமாகஇ நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றதுடன் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”