கோவில் அன்னதான திட்டத்தில் ரூ.1 கோடி மோசடி- முன்னாள் நிர்வாக அதிகாரி கைது..!!
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இக்கோவிலில் சீசன் காலங்களில் வரும் பக்தர்களுக்கு அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நிலக்கல்லில் உள்ள கோவில் சமையல் கூடத்திற்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கப்படும். இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி தலைமையிலான குழு ஒப்பந்த அடிப்படையில் வாங்கும்.
அதன்படி கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான அன்னதான திட்டத்திற்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கியதில் ரூ. 1 கோடியே 15 லட்சம் அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போது திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெயபிரகாஷ் என்பவர் மோசடியில் ஈடுபட்டதாக கேரள முதல் மந்திரி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கோவில் சமையல் கூடத்திற்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் சப்ளை செய்த ஒப்பந்ததாரரிடம் இருந்து போலி பில்கள் வாங்கியது, ஒப்பந்ததாரருக்கு பணத்தை குறைத்து கொடுத்தது தெரியவந்தது. இதன்மூலம் ஜெயபிரகாஷ் மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஜெயபிரகாஷ் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஜெயபிரகாசின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அயூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று ஜெயபிரகாசை கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. விசாரணையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.