இளைஞர்கள் மீது அக்கறை காரணமாகவே அக்னிபாத் திட்டத்தில் வயது தளர்வு – பாதுகாப்புத்துறை மந்திரி..!!
இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபாத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக அவர் கூறினார்.
இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, அக்னிபாத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். அரசின் வயது தளர்வு அறிவிப்பு இளைஞர்கள் நலன் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது என்றும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் அவர், பஹல்காமிலுள்ள ஜவஹர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மவுன்டெய்னரிங் மற்றும் விண்டர் ஸ்போர்ட்சின் 9-வது நிர்வாகக்குழு மற்றும் 4-வது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், மலையேறுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்கள் உடல் சகிப்புத் தன்மையை அதிகரிப்பதுடன், மனஉறுதியையும், உற்சாகத்தையும் தருவதாக குறிப்பிட்டார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த துறைகளில் தற்போது பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது அதிகரித்து வருவதற்கு, அவர் பாராட்டு தெரிவித்தார்.