அக்னிபாத் திட்ட பலன்கள் குறித்து போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு முழுமையாக தெரியவில்லை- ராணுவ அதிகாரிகள் கருத்து..!!
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அடுத்த வாரத்தில் ஆரம்ப ஆள்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான இந்திய விமானப்படையின் தேர்வு செயல்முறை ஜூன் 24 முதல் தொடங்கும் என்று ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி தெரிவித்துளளார்.
அதே நேரத்தில் ராணுவம் இரண்டு நாட்களுக்குள் ஆரம்ப பயிற்சியைத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டிசம்பருக்குள் பயிற்சி அளிக்க ராணுவம் இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செயல்பாட்டு மற்றும் செயல்படாத பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்னிபாத் திட்டத்தின் பலன்கள் குறித்து போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு முழுமையாக தெரியாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதுபோன்ற போராட்டங்களை எதிர்பார்க்கவில்லை என்றும், இந்திய ராணுவத்தில் இந்த திட்டம் மிகப்பெரிய மனித வள மேலாண்மை மாற்றத்தை ஏற்படுத்தும்என்று கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் திட்டத்தை புரிந்து கொண்டு அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இந்திய கடற்படையில் அக்னி வீரர்களாக இணைந்து தேசிய பாதுகாப்பிற்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும், இது தேசத்தை கட்டியெழுப்புதல் பணி என்றும் அவர் கூறியுள்ளார்.