செயலிழக்கும் அபாயத்தில் போக்குவரத்துச்சேவை!!
பொருளாதார நெருக்கடியின் விளைவாக எரிபொருளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தொடரும் நிலையில், வாகனங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மையால் பொதுப்போக்குவரத்து உள்ளடங்கலாக ஒட்டுமொத்த போக்குவரத்து சேவையும் படிப்படியாக செயலிழக்கும் நிலையேற்பட்டிருப்பதுடன், அதன் தொடர்ச்சியாக நாட்டின் அரச மற்றும் தனியார் துறை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படையக்கூடிய சாத்தியம் தோற்றம் பெற்றுள்ளது.
அதுமாத்திரமன்றி எரிபொருள் இல்லாததால் அரச மற்றும் தனியார் பஸ் சேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளாந்தம் பெருமளவானோர் புகையிரதசேவையைப் பயன்படுத்துவதுடன், இடநெருக்கடியின் காரணமாகப் பலர் புகையிரதத்தில் பாதுகாப்பற்ற முறையில் தொங்கியவாறும், புகையிரதத்திற்கு மேலே ஏறி அமர்ந்துகொண்டும் பயணிப்பதால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுகின்றது.
எரிபொருள் இல்லாததன் காரணமாக சேவையில் ஈடுபட்டுள்ள பஸ் வண்டிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் வழமையாக பஸ் வண்டியில் பயணிப்பவர்கள் கடந்த சில தினங்களாகப் புகையிரதத்தில் பயணிக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதன்படி இப்போது புகையிரதத்தில் வழமையை விடவும் இருமடங்கானோர் பயணிப்பதால் பெரும் எண்ணிக்கையானோர் புகையிரதத்தில் பாதுகாப்பற்ற முறையில் தொங்கியவாறும், புகையிரத மேற்பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டும் பயணிப்பது தீவிர உயிரச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பிற்கு வருகைதந்தவர்கள் பஸ் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவை மற்றும் தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் என்பன இல்லாததால் தமது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாமல் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுடன், இடைநடுவிலேயே எங்கேனும் தங்கியிருக்கவேண்டிய அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் நேற்றைய தினத்திலும் கொழும்பில் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக கார், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 3 – 4 கிலோமீற்றர் நீளத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்கமுடிந்தது. அதேபோன்று கொலன்னாவ, புளுமென்டல் ஆகிய பகுதிகளிலுள்ள பிரதான எரிபொருள் விநியோக நிலையங்களிலிருந்து எரிபொருளை நிரப்பிச்செல்வதற்காக எரிபொருள் பௌஸர்களும் வரிசையில் காத்திருந்தன. இதன் காரணமாக நேற்றைய தினம் கொழும்பின் பல பாகங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் அவதானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”