கோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை புகார் தாராபுரம் பகுதியில் அமைச்சர் ஆய்வு..!!
தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் பகுதிகளில் முட்டைக் கோழிகளை உற்பத்தி செய்யும் தனியாருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் கடந்த 4 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு புகார் தெரிவித்து வந்தனர்.
ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பலர் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றிய தகவல் அறிந்த தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பிரச்சினைக்கு காரணமான நஞ்சுண்டாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார்.
அப்போது கிராம மக்கள் கோழி பண்ணையில் இருந்து பரவும் ஈக்களால் தொடரும் தங்களது அவல நிலை குறித்தும், அதனால் பரவி வரும் நோய்த்தொற்று குறித்தும் புகார்களை கூறினர். உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.