கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!! (படங்கள்)
யாழ்ப்பாணம் கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் மதியம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டு சந்தை கட்டட தொகுதியுடன் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதனை அடுத்து இன்றைய அதிகம் அதிகாலை முதல் பெற்றோலுக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிமான
நீண்ட வரிசையில் மக்கள் வாகனங்களுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் காலை 10.45 மணியளவிலையே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் பவுசர் வந்திருந்தது. அதனை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வழங்குமாறு தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் கூறியதை அடுத்து பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர்.
அதனை அடுத்து மேலதிகமாக பொலிஸார் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் எரிபொருள் விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம் பெற்று வருகிற நிலையில் , பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது யாழ்.மாவட்ட செயலர், கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் இரண்டு மணிக்கு பின்னர் பிரத்தியேகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து மதிப்பீட்டு பணிகள் ஆரம்பமாகின என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”