;
Athirady Tamil News

கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு!!

0

கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு வழங்க கல்வியமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இருவாரங்கள் பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வியமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் நகர்ப்புறப் பாடசாலைகளை மூடுவதாகவும், கிராமப்புறப் பாடசாலைகளை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பாடசாலைகள் அனைத்தும் வகை 1ஏபி, 1சி , 2 என்னும் வகைகளாகவும், கஸ்ட – அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளாகவுமே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றுவரை, நகர்ப்புறப் பாடசாலைகள் மற்றும் கிராமப்புறப் பாடசாலைகள் எவை? என்பதைத் தீர்மானிப்பதற்குரிய குறிகாட்டிகள் எவையும் வெளியிடப்படாத சூழலில், சில மாகாணங்களில் சகல பாடசாலைகளையும் நடாத்தும் செயற்பாடு நடைபெறுகின்றது.

கிராமப் பாடசாலைகளை நடாத்தும் முடிவை கல்வியமைச்சு எடுத்திருந்தாலும், கஸ்ட – அதிகஸ்ட பிரதேச பாடசாலைகள் கிராமப்புறங்களிலேயே அமைந்துள்ளன. இவ்வகையான பாடசாலைகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்தும்,. தூர இடங்களிலிருந்தும் ஆசிரியர்கள் சென்று பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு பணியாற்றுபவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கான எரிபொருள் வசதிகளைப் பெறுவதற்குரிய எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யாது, பணிக்கு அழைக்க எடுத்துள்ள முடிவு கண்டனத்துக்குரியதாகும்.

பாடசாலைகளை சீராக நடத்தமுடியாமைக்கு அரசாங்கமே காரணமாகும். பொருட்கள் தட்டுப்பாடான நிலையில் மக்களுக்கான பங்கீடு தொடர்பாக அரசாங்கத்தின் செயற்திறனற்ற தன்மைகளே நெருக்கடிகளை தீவிரப்பபடுத்தியுள்ளன.

எனவே – பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் கடமைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு அனுமதிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.